பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்த கும்பல்.. செய்த காரியம்!
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஜான் விக் குழுவால் ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூலை மாதத்தில் இந்த ஹேக்கிங் நடந்தது என்றும் பின்னர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது என்றும் டுவிட்டர் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில், உலகப்பிரபலங்களான வாரன் பபெட், ஜெஃப் பெசோஸ், பராக் ஒபாமா, ஜோ பிடென், பில் கேட்ஸ் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை ஒரு கும்பல் ஹேக்கிங் செய்து பிட்காயின் பயன்படுத்தி நன்கொடை கோரும் செய்திகளை வெளியிட்டது. அதன்பிறகு கணக்குகள் மீட்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கும் ஜூலையில் ஹேக்கிங் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதை ட்விட்டர் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
பாதுகாக்க நடவடிக்கை
இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "இந்தச் செயல்பாட்டை நாங்கள் அறிந்திருக்கிறோம், மீட்டெடுக்கப்பட்ட கணக்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நிலைமையை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இந்த நேரத்தில், கூடுதல் கணக்குகள் பாதிக்கப்படுவது குறித்து எங்களுக்குத் தெரியாது. உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஆலோசனைகளை பின்பற்றுங்கள்" என்றார்.
நன்கொடை செய்தி
சரிபார்க்கப்பட்ட பிரதமர் மோடியின் தனிப்பபட்ட ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த கும்பல் பின்னர் அதில் பிட்காயின்களைப் பயன்படுத்தி கோவிட் -19 க்கான பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை கோரும் செய்திகளை வெளியிட்டுள்ளது. மோடியின் கணக்கை ஜான் விக் (hckindia@tutanota.com) ஹேக் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே ஜான் விக் குழு, நாங்கள் பேடிஎம் மால் ஐ ஹேக் செய்யவில்லை" என்று மறுத்துள்ளது.
திட்டவட்ட மறுப்பு
ஆகஸ்ட் 30 அன்று, பேடிஎம்மின் ஈ-காமர்ஸ் பிரிவான பேடிஎம் மால் தரவுகளை ஹேக்கர் குழு ஜான் விக் ஹேக்கிங் செய்ததாக சைபில் என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் கூறியது. ஆனால் எங்கள் நிறுவனத்தின் தரவுத்தளத்தை ஹேக்கர் குழு எதுவும் செய்யவில்லை என பேடிஎம் மறுத்துள்ளது.
டுவிட்டர் பதில் அளிக்கவில்லை
எந்தவொரு நபரின் டுவிட்டர் கணக்குகளையும் அங்கீகரிக்கப்படாத நபர்களை அனுமதிக்கும் அதன் உள் கட்டுப்பாடுகளின் சமரசத்தின் வீழ்ச்சியே இந்த ஹேக் என்பதற்கு ட்விட்டர் நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை. டுவிட்டர் கணக்கை அங்கீகரிக்கப்படாத நபர்கள் ஹேக் செய்யக்கூடிய வகையில் இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
0 Comments