மூளையே நம்முடைய சிந்தனைகளின் உறைவிடம், அறிவாற்றலின் ஆதாரம். உடலை மட்டுமல்ல; நம்முடைய மனத்தையும் மூளையே இயக்குகிறது. மூளை அளப்பரிய செயலாற்றல் கொண்டது. மூளையின் எல்லையை வரையறுக்கவும் அதன் செயலாற்றலைப் பிரதியெடுக்கவும் விஞ்ஞானம் காலங்காலமாக முயன்று வருகிறது. இந்த முயற்சியின் நீட்சியே இன்று பரவலாகப் பேசப்படும் செயற்கை நுண்ணறிவு. இதன் அடுத்தகட்ட நகர்வாக, மூளையின் செயல்பாடுகளை அறிந்து, அதன் கட்டளைகளை நிறைவேற்றும் நோக்கில், பன்றியின் மூளையினுள் ஒரு கணினி சிப்பைத் தனது நிறுவனம் பொருத்தியிருப்பதாக இலன் மஸ்க் அறிவித்துள்ளார்.
யார் இந்த இலன் மஸ்க்?
தென்னாப்பிரிக்காவில் பிறந்த இலன் மஸ்க் தன் 17-வது வயதில் கனடாவுக்குச் சென்று பொருளாதாரத்திலும் இயற்பியலிலும் பட்டம் பெற்றவர். ‘ஸிப்2’, ‘எக்ஸ்.காம்’ போன்ற நிறுவனங்களைத் தொடங்கிய அவர், இன்று ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, நியுரோ லிங்க் போன்ற நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்தான், இன்றளவும் தனியாரால் ஏவப்பட்ட செயற்கைக்கோளாகத் திகழ்கிறது. சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் கார்களைத் தயாரிப்பதில் இவரது டெஸ்லா நிறுவனம் முன்னணியில் உள்ளது. தற்போது மனித மூளையின் செயல்பாடுகளை ஆராயும் முயற்சியில் இவரது நியுரோ லிங்க் நிறுவனம் மும்முரமாக உள்ளது.
நியுரோ லிங்கின் நோக்கம்
மூளைக்கும் இயந்திரத்துக்கும் இடையே வயர்லெஸ் இணைப்பை உருவாக்கும் நோக்கில், 2016-ல் நியுரோ லிங்க் நிறுவனத்தை இலன் மஸ்க் தொடங்கினார். பார்வை குறைபாட்டுக்குக் கண்ணாடியைப் பயன்படுத்துவதுபோல் ஞாபகமறதி, கேட்கும் திறன் இழப்பு, பார்வை இழப்பு, முடக்குவாதம், பக்கவாதம், மனச்சோர்வு, தூக்கமின்மை, அதிகப்படியான வலி, வலிப்பு நோய்கள், பயம், பதற்றம், போதைக்கு அடிமையாதல், மூளை சேதம் உள்ளிட்ட மூளையின் குறைபாடுகளை அகற்றும்விதமாக ஏதேனும் கருவியை மூளையினுள் பொருத்த முடியுமா என்று ஆராய்வதே நியூரோ லிங்க் நடத்தும் ஆராய்ச்சியின் அடிப்படை நோக்கம்.
மூளைக்குள் கணினி
ஆகஸ்ட் 29 அன்று அவர் பங்கேற்ற நேரலையில், கெர்ட்ரூட் எனும் பன்றியை எலன் மஸ்க் அறிமுகப்படுத்தினார். அந்தப் பன்றியின் மூளையில், ஃபிட்பிட் கருவியை ஒத்த ஒரு கணினி சிப் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு நாணயத்தின் அளவை உடைய அந்தக் கணினி சிப், நுண்ணிய கம்பிகளின் மூலம் மூளையுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்த லிங்க் சிப்களை மூளையில் பொருத்துவதன் மூலம், வருங்காலத்தில் நமது நினைவுகளைச் சேமித்துவைக்க முடியும். தேவைப்படும் நேரத்தில் அதை மீட்டெடுத்து அசைபோட முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மஸ்க்.
எளிதில் பொருத்தலாம், அகற்றலாம்
குறிப்பிட்ட பகுதியில் மயக்கமருந்தைச் செலுத்தி, ஓர் அறுவை சிகிச்சை ரோபோ மூலம் இதை மூளையினுள் எளிதில் பொருத்திவிட முடியும். அதே நேரலையில் டோரதி எனும் மற்றொரு பன்றியை அவர் அறிமுகப்படுத்தினார். அந்தப் பன்றிக்குப் பொருத்தப்பட்டிருந்த கணினி சிப், தற்போது அகற்றப்பட்டுவிட்டது என்று மஸ்க் கூறினார். “இந்த நியூரோ லிங்க் கருவியைத் தேவைப்படும் நேரத்தில் மூளைக்குள் பொருத்திக்கொள்ளலாம், தேவையில்லையெனில் அகற்றிவிடலாம். அதனால் நமக்கு எந்த பாதிப்பும் வராது என்பதையே இந்த பன்றிகள் நமக்கு உணர்த்துகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
கற்பனை அல்ல
நியூரோ லிங்கின் கண்டுபிடிப்புகளுக்கும் அதன் அறிவியல் கூற்றுகளுக்கும் அறிவியல் ரீதியாக எந்த ஓர் ஆதாரத்தையும் இலன் மஸ்க் வெளியிடவில்லை. அறிவியலைப் பொறுத்தவரை, ஆதாரமற்ற எதுவும் வெறும் கற்பனையாகவே கருதப்படும். அந்த நேரலையில் இலன் மஸ்க் தெரிவித்த கருத்துகள் எதையும் அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும், அவருடைய கண்டுபிடிப்புகளை வெறும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. வெறும் கற்பனை என்று தொடக்கத்தில் புறந்தள்ளப்பட்ட அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் அதன் அபரிமிதமான சாதனைகளும் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.
0 Comments