எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வலியுறுத்தல்: ஐந்து எம்.பி.க்கள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம்

 



சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஐந்து எம்.பி.க்கள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தால் விவசாய நிலங்கள், இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாக எட்டு வழிச்சாலை திட்டத்துக்குப் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மேலும், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை உள்ளடக்கிய பகுதிகளை சேர்ந்த எம்.பி.க்கள் சேலம் மாவட்டம், குள்ளம்பட்டியில் இன்று (செப். 3) கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்்றனர் .

இக்கூட்டத்தில் எட்டு வழிச்சாலை திட்டப் பகுதிகளை உள்ளடக்கிய சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கவுதம சிகாமணி, கிருஷ்ணகிரி எம்.பி. செல்வகுமார், ஆரணி எம்.பி. விஷ்ணுபிரசாத், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் மற்றும் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், "சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தால் பல ஆயிரக்கணக்கான பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வாழ்வாதரம் கேள்விக்குறியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, சேலம் - சென்னை இடையே நான்கு வழி, ஆறு வழி, இரண்டு வழிச் சாலைகள் உள்ளன. மேலும், ரயில் மார்க்கமாக சென்னைக்குச் செல்ல போக்குவரத்து வசதி உள்ளது. தற்போது, புழக்கத்தில் உள்ள சேலம் - சென்னை இடையேயான மூன்று சாலைகளையும் மேம்படுத்தி, விரிவுபடுத்திட வேண்டும்.

ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்றிப் பயன் பெறலாம். இதனால், குறைந்த செலவே ஆகும். எட்டு வழிச்சாலைக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வது விரயச் செலவாகும். எனவே, எட்டு வழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட்டு, விவசாயிகள் நலன் காக்க வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments