செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, 5 மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 21ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், கொரோனா முன்னெச்சரிக்கையாக பின்பற்றப்பட வேண்டிய, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பள்ளிகளை திறக்கவும், அப்பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக அனைத்து பகுதிகளும் முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும் எனவும், பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக வேறு முறையில் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிராத்தனை கூட்டம், விளையாட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தை பயன்படுத்த கூடாது, நுழைவு வாயிலில் சானிடைசர், உடல் வெப்பநிலை பரிசோதனை போன்றவை கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கான வாகனங்களையும் முறையாக சுத்தம் செய்ய வேண்டும் எனவும், மாணவர்கள், ஆசிரியர்கள் வகுப்பறையில் எப்போதும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தங்களுக்குள்ளாக பேனா,பென்சில், நோட் ஆகியவற்றை மாற்றிக்கொள்ள அனுமதிக்க கூடாது என்றும், மாணவர்களுக்கு இடையே 6 மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், சோப் அல்லது சானிடைசரை கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் பாடம் நடத்துவதை முடிந்த வரை தொடரலாம் எனவும், பெற்றோர் அல்லது காப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்று, 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கலாம் எனவும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
0 Comments