முறை தவறிய உறவுக்கு தடை : ஆட்டோ சங்கர் பாணியில் இளைஞரை கொன்று சிமின்ட் வைத்து பூசிய அர்ச்சகர்!
பண்ருட்டியில் முறை தவறிய உறவுக்கு இடைஞ்சலாக இருந்த இளைஞரை அர்ச்சகர் ஒருவர் ஆட்டோ சங்கர் பாணியில் கொலை செய்து சிமின்ட் பூசி கோயில் வளாகத்துக்குள்ளேயே புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபிநாத் என்பவர் அதேபகுதியிலுள்ள வேணுகோபால்சாமி கோயிலில் அர்ச்சகராக உள்ளார். சுமார் 50 வயதான இவர், ஜாதகம் பார்க்கும் தொழிலும் செய்து வந்தார். கோபிநாத்துக்கும் அவரிடத்தில் உதவியாளராக பணியாற்றிய மஞ்சுளாவுக்கும் முறை தவறிய உறவு இருந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான மஞ்சுளா கணவரை பிரிந்து கண்ணதாசன் ( வயது 36) என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அர்ச்சகருக்கும் மஞ்சுளாவுக்குமிடையே இருந்த கள்ள உறவு குறித்து கண்ணதாசனுக்கு தெரிய வந்ததையடுத்து அவர் தட்டிக் கேட்டுள்ளார். தங்கள் உறவுக்கு தடையாக இருந்த, கண்ணதாசனை கொல்ல இருவரும் திட்டமிட்டனர். கடந்த, 11-ஆம் தேதி இரவு நேரத்தில் கண்ணதாசனை கோயிலுக்கு வரவழைத்த கோபிநாத் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். பின்னர், உடலை கோவில் வளாகத்துக்குள்ளேயே குழி தோண்டி புதைத்து அடையாளத்தை மறைக்க ஆட்டோ சங்கர் பாணியில் கொத்தனார் உதவியுடன் சிமென்ட் பூச செய்துள்ளார்.
தொடர்ந்து, கடந்த 17- ஆம் தேதி, 'கண்ணதாசனை காணவில்லை' என, மஞ்சுளா பண்ருட்டி போலீசில் அளித்தார். கண்ணதாசன் மொபைல் போன் அழைப்புகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது, மஞ்சுளா மற்றும் கோபிநாத்திடம் அடிக்கடி பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு, கோபிநாத் அர்ச்சகராக பணியாற்றிய வேணுகோபால்சாமி கோயிலில் இருந்துதான் கண்ணதாசனின் செல்போன் கடைசியாக சிக்னல் காட்டியது.
இதையடுத்து , சந்தேகமடைந்த போலீஸார் மஞ்சுளா, கண்ணதாசன் இருவரிடத்தில் துருவி துருவி விசாரித்தனர். விசாரணையில் கண்ணதாசனை கொன்று புதைத்ததை கோபிநாத் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து, கோபிநாத் அடையாளம் காட்டிய இடத்தில் நேற்றிரவு தாசில்தார் முன்னிலையில் கண்ணதாசனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. உடல் அமர வைக்கப்பட்ட நிலையில் அப்படியே சிமின்ட் பூசி புதைக்கப்பட்டிருந்தது. உடலை புதைக்க சிமின்ட் பூசி உதவிய கொத்தனாரை காவலத்துறையினர் தேடி வருகின்றனர்
0 Comments