மூணாறு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு
மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கான குடியிருப்பு பகுதி உள்ளது. அப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு குடியிருந்த 40 குடும்பத்தைச் சேர்ந்த 93 பேர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் தொடர்ந்து 3வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 93 பேரில் 43 பேரின் உடல், இறந்த நிலையிலும், 15 பேர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர். 35 பேரின் உடலை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனிடையே நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் எனவும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல்களையும், சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
0 Comments