ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம்! அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்!

ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம்! அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்!

பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படாமல் தேர்வுகள் நடைபெறாமல் உள்ள நிலையில் மாணவர்களிடம் இருந்து தேர்வுக் கட்டணம் வசூலித்தது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் விளக்கமளிக்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



ஒரு பருவத் தேர்வுக்கு சுமார் 10 லட்சம் மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடி வரையில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

யுஜிசி அறிவுரை

 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு யுஜிசி வழிகாட்டுதலின்படி, ஆண்டு இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எனவே, இத்தேர்வுகளை நடத்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்ணாபல்கலையின் முடிவு

 பொறியியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என அண்ணா பல்கலை கூறியுள்ளது. கொரோனோ தீவிரம் குறைந்தபின் அரசின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெற்று தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழகம்

 பருவத் தேர்வுகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டாலும், மாநிலத்தில் கொரோனாவின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படாமலேயே உள்ளது. குறிப்பாக, சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் அண்ணா பல்கலைத் தேர்வுகள் இப்போதைக்கு நடத்த முடியாத சூழலே நீடித்து வந்தது.

அண்ணா பல்கலை மீது புகார் 

பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படாமலும், ஊரடங்கினால் தேர்வுகள் நடைபெறாமல் உள்ள நிலையில் மாணவர்களிடம் இருந்து தேர்வுக் கட்டணம் வசூலித்தது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் விளக்கமளிக்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரவிக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்

 கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவர்களிடம் அண்ணா பல்கலைக் கழகம் தேர்வுக் கட்டம் வசூலித்ததாக இந்திய தனியார் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்குப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடைபெறாத தேர்விற்கு கட்டணம் வசூல் 

அம்மனுவில், இறுதியாண்டு தவிர பிற கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளைத் தமிழக அரசு ரத்து செய்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், நடைபெறாத தேர்வுகளுக்குக் கட்டணம் வசூலிப்பதில் அண்ணா பல்கலைக் கழகம் தீவிரம் காட்டி வருகிறது.

ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் 

குறிப்பாக, தற்போது அரசு, தனியார் கல்லூரிகளில் தேர்வுக் கட்டணமாக இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு ரூ.1,700 வரையில் வசூலிக்கப்படும். முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ரூ.3,500 வரையில் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, ஒரு பருவத் தேர்வுக்கு சுமார் 10 லட்சம் மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடி வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


அண்ணா பல்கலையில் ஆன்லைன் தேர்வா?

 இதனிடையே, சமீபத்தில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு இணையவழியில் பருவத் தேர்வுகள் நடத்துவதற்கான செயலியை வடிவமைக்க ரூ.1.86 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகைகளில் மாபெரும் வித்தியாசம் உள்ளது.

பல்கலை., விளக்கம் அளிக்குமா?

 எனவே, பொறியியல் மாணவர்களிடம் இருந்து தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பான முழு விளக்கத்தை அண்ணா பல்கலைக் கழகம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments