ஆசையாக வளர்த்த கிளி பறந்து போனதால் 10 வயது சிறுமி தற்கொலை - நீலகிரியில் சோக சம்பவம்
நீலகிரி மாவட்டத்தில் தான் வளர்த்த கிளி கூண்டை விட்டுப் பறந்து போய் விட்டதால் சோகமடைந்த 10 வயது சிறுமி, விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த ராமசாமி - ஜனிதா தம்பதியின் ஒரே மகள் 10 வயதான சுஜித்ரா. பெற்றோர் தோட்டத் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர். 4ம் வகுப்பு படித்து வந்த சுஜித்ரா, ஆசை ஆசையாக ஒரு பச்சைக் கிளியை வளர்த்து வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று, பெற்றோர் வேலைக்கு சென்று விட சிறுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அன்று மாலை வேலை முடிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றபோது சிறுமி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார்.
.
அவரை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தான் வளர்த்த கிளியின் கூண்டை சிறுமி திறந்து விட்டதால் கிளி பறந்து சென்று விட்டதாகத் தெரியவந்துள்ளது. பெற்றோருக்குத் தெரிந்தால் கண்டிப்பார்கள் என்ற பயத்தில் அல்லது கிளியின் மீது கொண்ட பாசத்தில் அவர், தோட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் பூச்சிமருந்தைக் குடித்து உயிரிழந்திருக்கலாம் என்கின்றனர் கூடலூர் போலீசார்.
உடற்கூறாய்வுக்குப் பின் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நிறைவேறின. தான் வளர்த்த கிளி பறந்து போனதால் விரக்தியடைந்த சிறுமி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
0 Comments