அரசுடைமையாக்கப்பட்ட வேதா நிலையம்: ஜெ. வீட்டில் 4 கிலோ தங்கம், 600 கிலோ வெள்ளி பொருட்கள்: அரசிதழில் 32,721 பொருட்களின் பட்டியல் வெளியீடு

அரசுடைமையாக்கப்பட்ட வேதா நிலையம்: ஜெ. வீட்டில் 4 கிலோ தங்கம், 600 கிலோ வெள்ளி பொருட்கள்: அரசிதழில் 32,721 பொருட்களின் பட்டியல் வெளியீடு



மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவது தொடர்பான அவசரச் சட்டம் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா வீட்டில் 4 கிலோ தங்கம், 600 கிலோ வெள்ளி உட்பட 32,721 பொருட்கள் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லம் அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று 2017 ஆகஸ்ட் 17-ம்தேதி முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, வேதா நிலையம் அமைந்துள்ள 22 ஏர்ஸ்60 சதுரமீட்டர் நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது

இந்நிலையில், வேதா நிலையம்,அதில் உள்ள அசையும் சொத்துகளை கையகப்படுத்துவதற்கான அவசரச் சட்டம் கடந்த மே 22-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதில், வேதா நிலையம் மற்றும் அசையும் பொருட்களை தற்காலிகமாக அரசுதன் வசம் எடுத்துக் கொள்ளவும், வேதா நிலையத்தை நினைவகமாக மாற்றுவதற்கான நீண்டகால ஏற்பாடுகளுக்காகவும் முதல்வர் பழனிசாமி தலைமையில் ‘புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜூலை 24-ம்தேதி வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான ஈடு தொகையாக ரூ.68 கோடியே 88 லட்சத்து 59 ஆயிரத்து 690, நகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, வேதா நிலையம் அமைந்துள்ள சொத்து அரசின் சொத்தாக ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மே 22-ம்தேதி வெளியிடப்பட்ட அவசர சட்டம், தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கியது தொடர்பான விவரங்கள், முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் பணிகள் விவரிக்கப்பட்டுள்ளன. வேதா நிலையம் இல்லத்தில் உள்ள பொருட்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன்படி, 14 தங்க பொருட்கள் (4 கிலோ 372 கிராம்), 867 வெள்ளி பொருட்கள் (601 கிலோ 424 கிராம்), சிறிய வெள்ளி பாத்திரங்கள்-162,தொலைக்காட்சிகள் - 11, குளிர்பதன பெட்டிகள்- 10, குளிர்சாதனம்- 38, மர சாமான்கள்- 556, சமையலறை பாத்திரங்கள் - 6,514, சமையலறை அலமாரிகள் மற்றும் மரபொருட்கள் -12, அலங்கார பொருட்கள் வைக்கும் அலமாரிகள் – 1,055,பூஜை பாத்திரங்கள் - 15, உடைகள்,டவல்கள், படுக்கை விரிப்புகள், இதர துணிகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், காலணிகள் என மொத்தம் 10,438 உள்ளன.

மேலும், தொலைபேசிகள் மற்றும் கைபேசிகள்- 29, சமையலறை மின்சார பொருட்கள் - 221, மின்சாரசாதனங்கள் - 251, புத்தகங்கள்- 8,376, நினைவுப் பரிசுகள்- 394, உரிமங்கள், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் வருமான வரி அறிக்கைகள் என ஆவணங்கள்- 653, ஸ்டேஷனரி பொருட்கள்- 253, பர்னிஷிங் தளவாடங்கள்- 1,712, சூட்கேஸ்கள்- 65, அழகுசாதன பொருட்கள் 108, கடிகாரங்கள்- 6, கெனான் ஜெராக்ஸ் இயந்திரம்-1, லேசர் பிரின்டர்- 1, இதர பொருட்கள் 959 என மொத்தம் 32,721 பொருட்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சொத்துகளை உரிமை கொண்டாடுபவர்கள், அதற்காக யாரை அணுக வேண்டும் என்றதகவலும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Post a Comment

0 Comments