9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 21 முதல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளைக் திறக்கலாம் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவியதன் காரணமாக ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்துத் தேர்வுகள் நடத்தப்படாமலேயே 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
நடப்புக் கல்வி ஆண்டுக்கான பாடங்கள் தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 21-ம் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* கரோனா கட்டுப்பாட்டு மையங்களுக்கு வெளியே உள்ள 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர்கள் விருப்பப்பட்டால் பள்ளிகளுக்கு வரலாம். கட்டுப்பாட்டு மையங்களுக்குள் இருக்கும் பள்ளிகளுக்கு யாரும் செல்லக் கூடாது.
* அதே நேரத்தில் தன்னார்வ அடிப்படையில் பெற்றோர்கள்/ பாதுகாவலர்களின் அனுமதி பெற்று, ஆசிரியர்களின் வழிகாட்டலைப் பின்பற்றியே பள்ளிக்கு வரவேண்டும்.
* நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், அழிப்பான், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை மாணவர்கள் பகிர்ந்துகொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
* போதிய தனிமனித இடைவெளியைப் பின்பற்றவும் வகுப்பறைகளுக்குள் தொற்றைத் தடுக்கவும் பள்ளிகளில் வெவ்வேறு கால அட்டவணைகள் பின்பற்றப்பட வேண்டும்.
* முகக் கவசம் அணிதல் கட்டாயம். அதேபோல ஒவ்வொருவருக்கும் இடையில் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
* அடிக்கடி சோப்பைக் கொண்டு குறைந்தபட்சம் 40 முதல் 60 நொடிகள் கைகளைக் கழுவ வேண்டும். இயலாத சூழலில் சானிடைசர் கொண்டு குறைந்தபட்சம் 20 முதல் 40 நொடிகள் கைகளைக் கழுவ வேண்டும்.
* ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். எச்சில் துப்புவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
* பள்ளிகளில் வழக்கமான நடைமுறைகளைத் தொடங்கும் முன், ஆய்வகம், வகுப்பறை மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்களை 1% சோடியம் ஹைப்போ க்ளோரைட் கரைசல் கொண்டு சுத்தப்படுத்தவேண்டும். கம்பி, கைப்பிடி உள்ளிட்ட அடிக்கடி தொட வாய்ப்புள்ள இடங்களை அதிக கவனம் கொடுத்துச் சுத்தப்படுத்த வேண்டும்.
* தனிமைப்படுத்தல் மையங்களாகச் செயல்பட்ட பள்ளிகள் செயல்படத் தொடங்கும் முன்னர், முற்றிலுமாக சுத்தப்படுத்த வேண்டியது அவசியம்.
* பள்ளியில் தொடுதல் இல்லாத வகையில் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும்.
* காலை வழிபாடு, மாணவர்கள் கூடுதல், விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும்.
* ஏசி அறைகளில் 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், ஈரப்பதம் 40-70 சதவீதமும் பராமரிக்கப்பட வேண்டும். முடிந்த அளவு இயற்கையான காற்றைச் சுவாசிக்கலாம்.
* பள்ளிகளில் உள்ள நீச்சல் குளங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும்.
* உரிய இடைவெளியைப் பின்பற்றி மாணவர்களின் லாக்கர்கள் பயன்படுத்தப்படலாம்.
*அதே நேரத்தில் விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளையே தொடரவும் அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89 ஆயிரத்து 706 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தத் தொற்று எண்ணிக்கை 43 லட்சத்து 70 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments