பாரதியார் பல்கலைக்கழக எம்.பில்., பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்.10-ல் நுழைவுத் தேர்வு; விண்ணப்பிக்க அக்.5 கடைசித் தேதி

 



பாரதியார் பல்கலைக்கழக எம்.பில்., பிஎச்.டி. படிப்புகளுக்கு வரும் அக். 10-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு முதுநிலைப் பட்டதாரிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கண்ட கல்லூரிகளில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படிப்புகளுக்கு ஆண்டுதோறும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதன்படி 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் (அக்.) 10-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்துப் பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) க.முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''பொது நுழைவுத்தேர்வுக்கு www.cet.b-u.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் வழியாக தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க அக். 5-ம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.250. இவர்கள் சாதிச் சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ்கள், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், விண்ணப்பதாரரின் கையொப்பம் ஆகியவற்றை ஜெபெக், ஜெபிஜெ, பிஎன்ஜி ஆவணங்களாக (512 கே.பி. அளவுக்குள்) பதிவேற்றம் செய்ய வேண்டும். பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரியையும் பதிவு செய்ய வேண்டும்.

இணையதள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 'ஒருங்கிணைப்பாளர், பொது நுழைவுத்தேர்வு (சிஇடி), பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-641046' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு chemistrybu1982@gmail.com., co-ordinatorcet2020@gmail.com என்ற முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி தகவல் பெற்றுக் கொள்ளலாம்.

யார் யாருக்கு விலக்கு?

யுஜிசி சிஎஸ்ஐஆர்-நெட், நெட், செட், கேட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆசிரியர் ஆய்வு நிதி பெற்றவர்கள், எம்.பில். முடித்தவர்கள், மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள், விமானப்படை நிர்வாகவியல் கல்லூரிப் பேராசிரியர்கள், வெளிநாடுகளில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் நுழைவுத்தேர்வு எழுதத் தேவையில்லை''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments