கொள்ளையர்களால் தாக்கப்பட்டதால் இறந்த மாமா... ஐ.பி.எல் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியதன் பின்னணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில், திடீரென்று ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பினார். கொரோனா பாதிப்பு என்று முதலில் செய்தி வெளியான நிலையில், அவரது மாமா கொள்ளையர்களால் தாக்கப்பட்டு இறந்ததால் தான் ஊர் திரும்பியுள்ளார் எனும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
பாஞ்சாப் மாநிலம், பதான்கோட் அருகிலுள்ள தரியல் எனும் கிராமத்தில் வசிக்கிறார் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார். 58 வயதாகும் அசோக்குமார் அரசு ஒப்பந்தக்காரராகச் செயல்படுகிறார். கடந்த 19 - ம் தேதி சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக்குமார் குடும்பத்தினருடன் மொட்டை மாடியில் படுத்துத் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் சிலர் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவர்களைப் பயங்கரமாகத் தாக்கி, வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். பயங்கர ஆயுதங்களால் தலையில் தாக்கப்பட்ட அசோக் குமார் அன்றைய இரவே உயிரிழந்தார். அசோக் குமாரின் 80 வயது தாய், மனைவி மற்றும் இரண்டு மகன்கள் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாகவே, ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்த சுரேஷ் ரெய்னா நாடு திரும்பியுள்ளதாகவும், அவர் முழு தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்கின் நட்சத்திர ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குப் பின்னடைவாகவே கருதப்படுகிறது.


0 Comments